வாருங்கள் வாருங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி மிக்க
சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
-அன்புடன் சக்திப்பிரதா

திங்கள், 24 ஜனவரி, 2011

நண்பியுடன் சைக்கிள் சவாரி


 
பாடசாலை நாட்கள் எப்போதும் மனதில் இன்பத்தை அள்ளிக் கொட்டுகின்றது. அந் நாட்களில் பாடசாலைக்கும், ரியூசனுக்கும் நண்பிகளுடன் சேர்ந்து சைக்கிளில் பயணிப்போம். அப்போது இன்றைய நாட்களைப் போல் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் இல்லை. போலீஸ் தொந்தரவுகளும் இல்லை. பின்னர் கேட்கவா வேண்டும்? அனைவரும் ஒன்றாக சேர்ந்து கதைத்து சிரித்தவாறு parallel ஆக வீதிகளில் செல்வோம். வீதியால் செல்லும் பெரிசுகளுடன் மோதப் பார்த்து செமையாக வாங்கிக் கட்டிய நாட்களும் உண்டு.

எங்கள் குரூப்பைச் சேர்ந்த நண்பி ஒருத்தியிடம் ஒரு சைக்கிள் இருந்தது. ஒரு நாள் அதன் பிரேக் உடைந்து விட்டது. அவள் வீடு வறுமையில் இருந்ததால் புதிய பிரேக் வாங்கிப் போடமுடியாது இருந்தாள். அதனால் அவள் எம்முடன் சேர்ந்து வரும் போது மெதுவாகவே ஓட்டுவோம். அவள் ஆள் தைரியசாலி. இக்கட்டான சந்தர்ப்பங்களில் எப்படியாவது சமாளித்துவிடுவாள்.

எனது சைக்கிள் பஞ்சராகினால் நான் அவளுடன் தான் செல்வேன். அப்படித்தான் ஒருநாள் வகுப்பிற்குச் செல்லும் போது என்னை சைக்கிள் ஓட்டுமாறும் தான் கேரியலில் இருந்து வருவதாகச் சொன்னாள். நான் பிரேக்கை நினைத்து பயந்த போது, என்னை மெதுவாக ஓட்டுமாறும் சிக்கல் வந்தால் தான் தடாலென கீழே குதித்து சைக்கிளை கேரியலில் பிடித்து பின்பக்கமாக இழுத்து நிறுத்திவிடுவேன் என்று சொன்னாள்.

அவள் சொன்னது போல் ஒரு முறை செய்து என்னைக் காப்பாற்றி விட்டாள்.  இல்லா விட்டால் நான் வெள்ள வாய்க்காலில் நீந்தியிருப்பேன். இதனால் எனக்குத் தைரியம் வந்துவிட்டது. இப்படித்தான் ஒரு முறை வீதி வளைவில் திரும்பும் போது, minimum எவ்வளவு குறைவான Parts உடன் சைக்கிள் ஓட்டலாமோ அவ்வளவு குறைவான parts உடன் (பிரேக் இல்லை, பெல் இல்லை, கேரியல் இல்லை, முன் பின் மக்காட் இல்லை, பெடல் Rubber இல்லை, சீற்றுக்குப் பதிலாக துணி முடிச்சு வச்சு பானை போல் கட்டப்பட்டிருந்நது) வேகமாக சைக்கிளில் வந்த ஒரு கிழவனுடன் மோதினேன். அவ்வேளை கீழே குதித்த எனது நண்பியின் கடும் பிரயத்தனமும் பலிக்காமல், கிழவனின் குதிக்கால் பிரேக்கும் பலிக்காமல், கிழவனும் நானும் வேலிக்குள் போய் விழுந்து எழும்பினோம். கிழவனுக்கு நல்ல அடி. அந்தப் பொல்லாத கிழவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. இரண்டு பேருக்கும் வஞ்சகமில்லாமல் வசைமாரி பொழிந்தது மட்டுமில்லாமல் எனது வீட்டு வந்து அப்பாவிடம் அண்டி வைத்து எனக்கு அடி வாங்கித் தந்தது. இதனால் எனது தங்கைகளுக்கு ஏகப்பட்ட குஷி. எனக்கு விழுந்த அடியில நண்பியின் வீட்டில் அவசர அவசரமாக சைக்கிளுக்கு பிரேக் போடுப்பட்டது.

இப்படி குட்டிக் குட்டியா எங்க வாழ்க்கையில் நிறைய குட்டீஸ் கலாட்டாக்கள் இருக்கு.