வாருங்கள் வாருங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி மிக்க
சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
-அன்புடன் சக்திப்பிரதா

புதன், 26 ஜனவரி, 2011

கர்மா - நியூட்டனின் 3ம் விதி

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு"

இது நியூட்டனின் 3ம் விதி. நம்மில பல பேர் நியூட்டனின் 3ம் விதி சடப்பொருளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும் என்று நினைக்கிறாங்க. இதெல்லாம் Science, Maths படிக்கிறவங்களுக்குத் தான் சரி. நமக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை அப்பிடின்னு ஒதுங்கிக்கிறாங்க. அது ரொம்பத் தப்பு அப்பிடின்னு நா சொல்றன். ஏன்னா நா பட்ட அனுபவம், மற்றது மற்றவங்க பட்ட அனுபவம், இன்னும் சொல்லணும்னா பாத்தது கேட்டது, மற்றவங்க வாழ்கையை அலசி ஆராஞ்சது இதிலேர்ந்து நா கிரகிச்சுக் கொண்டது, அதில இருந்து நா எடுத்த முடிவுகள் இத வச்சு தான் நா இப்பிடி சொல்றன். என்ன குழப்பமா இருக்கா? இருங்க இருங்க புரியும் படியா சொல்றன்.

நம்மில பலபேர் தெரிங்சோ தெரியாமலோ நிறைய தப்புக்கள் பண்ணறம். அதுக்கப்புறம் அத நியாயப்படுத்த பல காரணங்கள் சொல்றம். இல்லைன்னா அத மூடி மறைக்க இன்னும் நிறைய தப்புக்கள் பண்ணறம். எல்லாம் சரியாயிடிச்சின்னா நாம வென்றதா நினைச்சுக்கிறம். சில நாள்ல எல்லாவற்றையும் அடியோட மறந்திடுறம். அதோட கடந்த கால chapter ஐ close பண்ணிறுவம். ஏன்னா நாம ஜெயிச்சிட்டம் இல்லையா அந்த திமிருல. but அதுக்கப்புறம் தான் நம்ம கணக்கு தீர்க்கிற வேலையை இயற்கை (இறைவன்) ஆரம்பிக்கிது. அத நாம அறியமாட்டம். இயற்கை எப்பிடி இந்த கணக்கை தீர்க்குது எண்டு ஆராஞ்சு பார்த்தா குறைஞ்ச பட்சம் நியூட்டனின் 3ம் விதியை அது யூஸ் பண்ணியிருக்கும். நீங்க விட்ட கணக்கு ரொம்ப சிக்கலா, தீர்க்க கடினமா இருந்தா அதற்கு மேல நாம இன்னும் கண்டு பிடிக்காம இருக்கிற ஏதாவது ஒரு law ஐ யூஸ் பண்ணியிருக்கும். அதற்கப்பறம் நாம முழி பிதுங்கி எதுவும் செய்ய இயலாது. ஏன்னா இயற்கை சமநிலையை பாதுகாப்பது இயற்கைக்கு ரொம்ப முக்கியமானது. அது தன்னோட கடமையை இதுவரை சரியா செஞ்சுண்டிருக்கு. இனிமேலும் சரியா தான் செய்யும். என்ன புரிஞ்சுதா?

தப்பு செய்யுறவன் தான் இன்னிக்கு நல்லாயிருக்கான் எண்டு பல பேரு நினைக்கிறாங்க. அது ரொம்ப தப்பான நினைப்பு. இத நீங்க எல்லாரோட வாழ்க்கையையும் ஆராஞ்சு பாத்தீங்கன்னா தெளிவா புரியும்.

அதனால நாம மற்றவங்களுக்கு உதவி செய்யலைனாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாதிருப்போம். அது நமக்கு தான் நல்லது.

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"

திங்கள், 24 ஜனவரி, 2011

நண்பியுடன் சைக்கிள் சவாரி


 
பாடசாலை நாட்கள் எப்போதும் மனதில் இன்பத்தை அள்ளிக் கொட்டுகின்றது. அந் நாட்களில் பாடசாலைக்கும், ரியூசனுக்கும் நண்பிகளுடன் சேர்ந்து சைக்கிளில் பயணிப்போம். அப்போது இன்றைய நாட்களைப் போல் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் இல்லை. போலீஸ் தொந்தரவுகளும் இல்லை. பின்னர் கேட்கவா வேண்டும்? அனைவரும் ஒன்றாக சேர்ந்து கதைத்து சிரித்தவாறு parallel ஆக வீதிகளில் செல்வோம். வீதியால் செல்லும் பெரிசுகளுடன் மோதப் பார்த்து செமையாக வாங்கிக் கட்டிய நாட்களும் உண்டு.

எங்கள் குரூப்பைச் சேர்ந்த நண்பி ஒருத்தியிடம் ஒரு சைக்கிள் இருந்தது. ஒரு நாள் அதன் பிரேக் உடைந்து விட்டது. அவள் வீடு வறுமையில் இருந்ததால் புதிய பிரேக் வாங்கிப் போடமுடியாது இருந்தாள். அதனால் அவள் எம்முடன் சேர்ந்து வரும் போது மெதுவாகவே ஓட்டுவோம். அவள் ஆள் தைரியசாலி. இக்கட்டான சந்தர்ப்பங்களில் எப்படியாவது சமாளித்துவிடுவாள்.

எனது சைக்கிள் பஞ்சராகினால் நான் அவளுடன் தான் செல்வேன். அப்படித்தான் ஒருநாள் வகுப்பிற்குச் செல்லும் போது என்னை சைக்கிள் ஓட்டுமாறும் தான் கேரியலில் இருந்து வருவதாகச் சொன்னாள். நான் பிரேக்கை நினைத்து பயந்த போது, என்னை மெதுவாக ஓட்டுமாறும் சிக்கல் வந்தால் தான் தடாலென கீழே குதித்து சைக்கிளை கேரியலில் பிடித்து பின்பக்கமாக இழுத்து நிறுத்திவிடுவேன் என்று சொன்னாள்.

அவள் சொன்னது போல் ஒரு முறை செய்து என்னைக் காப்பாற்றி விட்டாள்.  இல்லா விட்டால் நான் வெள்ள வாய்க்காலில் நீந்தியிருப்பேன். இதனால் எனக்குத் தைரியம் வந்துவிட்டது. இப்படித்தான் ஒரு முறை வீதி வளைவில் திரும்பும் போது, minimum எவ்வளவு குறைவான Parts உடன் சைக்கிள் ஓட்டலாமோ அவ்வளவு குறைவான parts உடன் (பிரேக் இல்லை, பெல் இல்லை, கேரியல் இல்லை, முன் பின் மக்காட் இல்லை, பெடல் Rubber இல்லை, சீற்றுக்குப் பதிலாக துணி முடிச்சு வச்சு பானை போல் கட்டப்பட்டிருந்நது) வேகமாக சைக்கிளில் வந்த ஒரு கிழவனுடன் மோதினேன். அவ்வேளை கீழே குதித்த எனது நண்பியின் கடும் பிரயத்தனமும் பலிக்காமல், கிழவனின் குதிக்கால் பிரேக்கும் பலிக்காமல், கிழவனும் நானும் வேலிக்குள் போய் விழுந்து எழும்பினோம். கிழவனுக்கு நல்ல அடி. அந்தப் பொல்லாத கிழவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. இரண்டு பேருக்கும் வஞ்சகமில்லாமல் வசைமாரி பொழிந்தது மட்டுமில்லாமல் எனது வீட்டு வந்து அப்பாவிடம் அண்டி வைத்து எனக்கு அடி வாங்கித் தந்தது. இதனால் எனது தங்கைகளுக்கு ஏகப்பட்ட குஷி. எனக்கு விழுந்த அடியில நண்பியின் வீட்டில் அவசர அவசரமாக சைக்கிளுக்கு பிரேக் போடுப்பட்டது.

இப்படி குட்டிக் குட்டியா எங்க வாழ்க்கையில் நிறைய குட்டீஸ் கலாட்டாக்கள் இருக்கு.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

Funny Animals

இதையும் பார்த்து ரசியுங்கள். மனம் லேசாகிவிடும்.

















இறுதிப் படத்தை மட்டுமாவது Click பண்ணி பாருங்களேன்.

Funny Video

இந்தப் பூனைகள் போடும் குத்தாட்டத்தைப் பாருங்களேன். ஸ்ஸஸஸஸூபாடியோவ்..... எப்படித்தான் இதுகளை வச்சு சமாளிக்கிறாங்களோ?




Funny Video

வாய்விட்டுச் சிரியுங்கள் நோய்விட்டுப்போகும்



வெள்ளி, 21 ஜனவரி, 2011

மேடைக் கூச்சமும் பேச்சாற்றலும்

முன்னேற்றம் அடைந்துவரும் இன்றைய நவீன உலகில் இளைஞா்கள் பல்வேறு துறைகளில் முன்னனியில் நிற்கின்றனர். பொறுப்பான பல பதவிகளை அவர்கள் அலங்கரிக்கின்றனர். என்ன தான் திறமையிருந்தாலும் மேடைக் கூச்சம் மட்டும் அவர்களை விட்டு அகலவில்லை. அலுவலகங்கள், பொதுநிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் போது பல சந்தர்ப்பங்களில் மேடைகளில் பங்குபற்றவேண்டியேற்படலாம்.

உதாரணமாக, நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கல், சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்ற வேண்டியிருத்தல், சங்கங்கள், கழகங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்றல், கல்விகற்குமிடம் மற்றும் பணிபுரியுமிடங்களில் நடைபெறும் ஒன்றுகூடல்களில் பங்குபற்றல் போன்றன அவற்றுள் சிலவாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயற்படவேண்டியுள்ளது. அதற்கான விருப்பமும் பொதுவாக அனைவரிடமும் உண்டு. ஆனால் விரும்பியபபடி செயலாற்ற நமது தாழ்வு மனப்பான்மை, பயம் கூச்ச சுபாவம் போன்றன தடைக்கல்லாக அமைந்ழவிடுகின்றது. முதலில் இவற்றைக் களைந்தெறிந்தாலேயே நாம் வீறு நடைபோட்டு முன்னேற முடியும். எவ்வாறு இதைச் சாத்தியமாக்குவது என்பது பற்றிப் பார்ப்போம்.

மேடையில் பலபேர் முன்னிலையில் வெறுமனே சும்மா நிற்பதென்றால் கூட சிலருக்கு நடுக்கம் பிடித்துவிடும். அப்படியிருக்கையில் மேடைப் பேச்சுப் பற்றிக் கேட்கவா வேண்டும்? இக் குறைபாடுகள் களைந்தெறியப்பட வேண்டுமாயின் ஆரம்பத்தல் மிக மிகச் சிறிய முயற்சிகளைச் செய்து பார்க்கலாம் அல்லவா? மிக மிகப் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களுக்கு கீழுள்ள கறிப்புகள் உதவி செய்யும். கீழே குறிப்பிடப்படும் விடயங்கள் சர்வசாதாரணமாக நகைப்பிற்குரியதாகத் தோன்றினாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தினைக் கொண்டுவரமுடியும். இது அனுபவத்தில் உணரப்பட்ட விடயமாகும்.

1. நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் மேடை அதன் அயல் பக்கங்களை முதன் நாளே சென்று பார்த்து அச்சூழலை, இடத்தை எமக்குப் பரீட்சயமாக்கிக் கொள்ளல்.

2. மேடையின் மேலே ஏறி நிமிர்ந்து நின்று பார்வையாளர் பகுதியை பார்வையிடல். அப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்தல். மனநிலை கட்டுப்பாட்டில் உள்ளதாயின் நல்லது. அல்லது திரும்பத் திரும்ப அவ்விடங்களில் நின்று பழக்கப்படுத்திக் கொள்ளல். நண்பர்களுடன் அவ்விடத்தில் நின்று சிரித்துக் கதைத்தல், கும்மாளமடித்தல் போன்றவற்றைச் செய்து பார்த்தல்.

3. விசுவாசமான நண்பர்களை பார்வையாளர் பகுதியில் அமரச்செய்தபின் மேடையில் சிறிய காட்சிகளை நடித்துக்காட்டல், பேசிக்காட்டல் குறைகளைக் கேட்டுத்திருத்துதல்.

4. வீட்டில் அனைவர் முன்னிலையிலும் பேசி, நடித்துக்காட்டி பிழைகளைத் திருத்திக்கொள்ளலாம்.

5. இன்னுமொரு வழி உள்ளது. அலுவலகங்கள், நிறுவனங்களில் கூட்டங்கள் நடைபெறும் போது தலைமை தாங்குபவருக்கு உதவியாக முன்னே நின்று அவருக்குத் தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்வதன் மூலம் சபைக் கூச்சத்தை ஓரளவிற்குப் போக்கிக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டவை வளர்ந்தோருக்கான சபைக் கூச்சத்தைப் போக்குவதற்கான சில வழிகள். இவ்வாறு தாம் பெரியவரான பின் அவஸ்தைப்படுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாதவாறு வளர்த்தெடுத்தல் முக்கியமானதாகும். சிறு குழந்தையிலேயே அவர்களுக்கு வீட்டில் பயிற்சிகள் அளிக்கப்படல் வேண்டும். பெற்றோர் முன்னிலையில் ஆடிப்பாடி, பேசி, நடித்துக்காட்டும்படி ஊக்குவித்து குறைகளைச் சுட்டிக்காட்டி திருத்திவிடவேண்டும். சிறுவயதிலேயே அவர்கள் சிறிய மேடை நிகழ்சிகளில் பங்குபற்றுவதற்கு ஊக்கமளிக்வேண்டும். இவ்வாறு நல்ல முறையில் வளரும் பிள்ளைகள் பெரியவர்களான பின் அவஸ்தைப்பட நேரிடாது.

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி தன்னம்பிக்கை என்னும் இணையத்தளத்தில் நிறைய பயனுள்ள தகவல்கள் காணப்பட்டது. அதில் உள்ள தகவல்களை அப்படியே தருகிறேன் படித்துப் பயனடையுங்கள்.



பேச்சாற்றல் பெற அடிப்படைத் தேவைகள்:
எந்த ஒரு ஆற்றலை வளத்துக்கொள்வதற்கும் முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையும், தேவை. இத்தோடு ஆர்வமும், பல்வேறு சொற்பொழிவுகளை கேட்கும், சிந்திக்கும் இயல்பும், ஏராளமாகப் படிக்கின்ற பழக்கமும், மேலும் நல்ல பயிற்சியும் வேண்டும்.

ஆர்வம் : (Desire)
சிறந்த பேச்சாளர்களாக ஒளிர்ந்திட எண்ணுகிறவர்களுக்கு முதலில் பேச்சாளராக வேண்டும் என்ற ஆர்வம் நெஞ்சத்தில் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். பேச வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றிவிட்டால் நல்ல சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும் என்கிற துடிப்பும் இயல்பாகவே வந்துவிடும். திருமதி. சரோஜினி நாயுடுவின் இனிய சொற்பொழிவுகளைக் கேட்டு அது போலவே பேச வேண்டும் என்கிற ஆர்வம் இளைஞராக இருந்த நேருவின் உள்ளத்தில் உதயமானதாக அவரே குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் இருபது முப்பது மைல்கள் நடந்து போய் சிறந்த பேச்சுக்களைக் கேட்டு அவர்களைப் போலவே தானும் ஒரு காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டும் என்கிற ஆர்வத்தைச் சிறு வயதிலேயே வளர்த்துக் கொண்டாராம். ஆகவே பேச்சாளராக விரும்புவோர்க்கு உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பொங்கி வரும் ஆர்வம் வேண்டும். 

கூட்டங்களுக்குச் சென்று சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்கிற போது எப்படிப் பேசுகிறார்கள், அவர்தம் அங்க அசைவுகள், குறல் ஏற்ற இறக்கம், இவற்றையெல்லாம் ஊன்றி கவனிக்க வேண்டும். கேட்டவை எல்லாம் நினைவில் நிலைத்து நின்று விடாது. எனவே சிறந்த கருத்துகள், தொடர்கள், செழுமையான சொற்கள், கவிதைகள் இவற்றையெல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைக்க வேண்டும். கூட்டத்தில் ஒரு துண்டு சீட்டில் குறித்து வந்து வீட்டில் குறிப்பேட்டில் எழுதிவைக்கலாம்.

ஒருமணி நேரம் ஒரு சொற்பொழிவாளர் பேசுவதற்குப் பல வாரங்கள் பல மாதங்கள் படித்து கருத்துக்களை சேர்த்திருப்பார். இந்த அரிய கருத்துக்களை அவரின் சொற்பொழிவைகேட்பதன் மூலம் பெறலாம். எனவே செவிச் செல்வம் சிறந்த செல்வமாகும். பேச்சாளராக விரும்புவோர் முதலில் சிறந்த பேச்சுக்களை கேட்பது முக்கியம்.

படி…படி…படி… : (Read Read and Read)
அமெரிக்க சனாதிபதியாக இருந்த உட்ரோவில்சனை ஒரு நண்பர் கேட்டாராம்.
நீங்கள் காலமணி நேரம் சொற்பொழிவாற்ற எத்தனை நாட்கள் தயார் செய்வீர்கள் என்று கேட்ட அதற்கு அவர் இரண்டு வாரம் என்றாராம். பிறகு ஒரு மணி நேரம் பேச ஒரு வாரம் என்றாராம். பிறகு இரண்டு மணி நேரம் பேச வேண்டும் என்றால் எத்தனை நாள் தயார் செய்வீர்கள் என்றதற்கு இப்போதே பேசுகிறேன் என்றாராம்.

சுருங்கப் பேச நிறைய படித்து தயார் செய்ய வேண்டும் என்பதையே இந்திகழ்ச்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது. பேச்சுக் கலையில் வல்லவனாவதற்கு வேண்டியது முதலில் கடின உழைப்பு, இரண்டாவது படித்தல், மூன்றாவது பகுத்தறியும் தன்மை. என்று அடிசன் கூறியுள்ளார். பேச்சாளராக ஒளிவிட விழைவோர்க்கு ஏராளமாக படிக்கும் பழக்கம் வேண்டும். படிக்கும் போது அழகான கருத்துக்களையோ, மனதைக் கவரும் அடுக்கு மொழியையோ கண்டால் உடனே குறிப்பேட்டில் குறித்து வைக்க வேண்டும். நல்ல கவிதைகளை, வாசகங்களை படித்தால் அதை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்து, அடிக்கடி நினைத்துப் பார்த்து மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.
தலைசிறந்த பேச்சாளரான வின்ஸ்டன் சர்ச்சில் மேசைக்கு பக்கத்தில் ஒரு பீரோவில் கிப்பன், மெக்காலே, அடிசன், லாக் முதலியோரின் பல புத்தகங்களும் அமெரிக்காவில் நடந்த புரட்சிக் கலகங்களைப் பற்றிய கட்டுரைகளும் இருந்தனவாம். எப்போதும் புத்தகமும் கையுமாகவே சர்ச்சில் இருப்பாராம். அதே போல எதையாவது உருப்போட்டுக் கொண்டே இருப்பாராம். கிப்பன், மெக்காலே, டெனிசன் ஆகியோரின் நூல்களில் அவருக்கு அளவுகடந்த விருப்பம்.

நிறைய நூல்களைப் படிப்பதால் கருத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது. பேசும் போது சொற்களைத் தேடி செல்ல வேண்டி இருக்காது. புதிய புதிய சொற்கள் பழகிப் போய்விடும். பேசும் போது தானாகவே வலிய வந்து விழும். இதனால் பேச்சு சிறப்பாக அமையும்.

சிந்தனை : (Thinking)
படித்ததை, கேட்டதை மனதிலிருத்திச் சிந்திக்க வேண்டும். எந்தத் தலைப்பில் பேசப்போகிறோமோ அந்தப் பொருள் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பேச்சாளராக விரும்புவோர்க்கு சிந்திக்கின்ற பழக்கம் வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க அரிய கருத்துக்கள் வந்து சரண்டையும். இருபதாம் நூற்றாண்டிலும் விலங்குகளாகக் கிடந்தத் தமிழனை மனிதனாக மாற்ற பட்டிதொட்டி எங்கும் முழங்கி வந்தாரே தந்தைப் பெரியார். அவர் பேச்சுக்கு அணி செய்தவை அவரது சிந்தனைகளே. அவர் பெரிய படிப்பாளி இல்லை ஆனால் சிந்தனையாளர். எனவே ஒரு சிறந்த பேச்சாளராக வளர விரும்புவோர் சிந்தனையாளராகவும் இருக்க வேண்டும். கிரேக்கத்து அறிவுக் கிழவன் சாக்ரடீசை மக்கள் கூட்டம் மொய்த்ததே எதனால்? அவர் ஒரு சிந்தனையாளராக இருந்ததால்.

இரவில் தூங்கச் சென்றுவிட்டு குறிப்பிட்ட பொருள் குறித்து சிந்தித்துக் கொண்டே உறங்கியும் உறங்காத நிலையில் திடீரென வெளிப்படுகிற சிந்தனைகளை குறித்து வைத்து அதை சொற்பொழிவுகளிடையே பயன்படுத்தி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறேன். இன்னும் சொல்வதானால் கவியரங்கங்களில் ஆரவாரமான கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற எனது கவிதை வரிகளை இரவில் உறங்கச் சென்றபிறகு ஆழ்ந்த சிந்தனை மயக்கத்தில் தலையணைக்குப் பக்கத்தில் எப்போதும் வைத்திருக்கும் காகிதத்தில் எழுதி வைத்தவைகளே. எனவே சிறந்த பேச்சாளராக சிந்தனையாற்றலையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

பயிற்சி : (Practice)
பல நூல்களை நாம் படித்திருக்கலாம். கல்வியில் கறைகண்டவராகக்கூட இருக்கலாம். இருந்தும் மேடையில் பேச இயலாமல் போகலாம். ஆங்கில அறிஞன் ஆலிவர் கோல்டுஸ்மித்தைப் பற்றி டாக்டர் ஜான்சன் அவன் தேவனைப் போல் எழுதினான், ஆனால் கொச்சைக் கிளியைப் போல் பேசினான் (He wrote like an angel but talked like poor parrot) என்று சொன்னாராம். ஆம். படித்தவர்கள் எழுத்தாளர்கள் எல்லோரும் பேச்சாளர்களாகிவிட முடியாது. அதற்கு வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் மேடைகளில் பேசிப் பழக வேண்டும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ எங்கே போய் பயிற்சி பெறுவது? பள்ளியில் படிப்போர்க்கு இலக்கியமன்றக் கூட்டங்கள்தான் பயிற்சிக்களம். கல்லூரி மாணவர்க்கு கல்லூரிப் பேரவை, இலக்கியப் பேரவை கூட்டங்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெறலாம். மற்றவர்கள் உங்கள் பகுதிகளில் நடைபெறுகிற சங்கக்கூட்டங்கள், இலக்கியக் கழகங்கள், உழவர்மன்றக் கூட்டங்கள் மற்றம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தி மேடையேறலாம்.

உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது விடுமுறை நாட்களில் மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு எதிரிலே இருக்கிற கால்நடைகளை எல்லாம் மனிதர்களாக எண்ணி உணர்ச்சி கொப்பளிக்க உரக்கப் பேசுவேன். வயல் வரப்புகளில் நின்று கொண்டே கதிர் முற்றி நிற்கிற பய்ர்களை எல்லாம் என் உரையை உட்கார்ந்து கேட்கிற மனிதர்களாகக் கற்பனை செய்துகொண்டு சத்தம் போட்டு கைகளை அப்படியும் இப்படியும் வீசிவீசிப் பேசி மகிழ்ந்திருக்கிறேன்.

பிட் (Pitt) என்ற ஆங்கில அறிஞர் மணிக்கணக்கில் நிலைக்கண்ணாடி முன் நின்று பேசிப்பார்த்து தன் தோற்றத்தையும் கைகால் அசைவுகளையும் கூட முன்கூட்டியே ஒத்திகை பார்த்துச் சரிசெய்து கொள்வாராம் ஹென்றி கிராட்டன் என்னும் ஐரிஷ் பேச்சாளர் வசித்த வீட்டின் சொந்தக்காரி அவர் மனநோயாளி என்று வாதிட்டாராம். காரணம், வீட்டில் வேறு ஒருவரும் இல்லாத போது அறையை மூடித் தாளிட்டுக் கொண்டு உள்ளே ஏதேதோ கத்திக் கொண்டே கிடப்பதாகக் கூறினாளாம். உண்மை என்னவெனில் அறையைத் தாளிட்டுக் கொண்டு அவர் தம் மனத்தின் முன் பாராளுமன்றத்தை வரவழைத்து “Mr. Speaker” என்று தொடங்கி, தம் கோடையிடிச் சொற்பொழிவுகளைப் பொழிந்து தள்ளிப் பயிற்சி செய்வாராம்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய பேச்சாளர்களுள் ஒருவரான வின்ஸ்டன் சர்ச்சில் தன்னுடைய பேச்சை முன்பே தயாரித்துக் கொள்வதோடு, நிலைக் கண்ணாடியின்முன் நின்று அங்கு அசைவுகளோடு பேசிப் பயிற்சி செய்து கொள்வாராம். அத்தோடு தன்னுடைய சொற்பொழிவை எப்படி பேச வேண்டுமோ அப்படியே பேசி ஒலி நாடாவில் (Taperecorder) பதிவு செய்துகொண்டு, அதைத் திரும்ப போட்டுக் கேட்டு அதில் ஏதாவது குறை இருந்தால் திருத்திக் கொள்வாராம். சர்ச்சில் போன்ற உலகப் பெரும் பேச்சாளர்களே இப்படிப் பயிற்சி செய்து கொண்டார்கள் என்றால் பேச்சாளராக வளர விரும்பும் உங்களுக்குப் பயிற்சி எந்த அளவுக்கு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உரை தயாரிப்பு : (Speech Preparation)
ஒரு கூட்டத்தில் பேசப் போவதற்கு முன் என்ன தலைப்பில் பேசப்போகிறோம் என்று சரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்து விட்டாலே பாதி வெற்றியாகும். எந்த அமைப்பில் பேசப்போகிறோம், கேட்கிறவர்கள் (Audiance) எத்தகையவர்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப பொருத்தமான தலைப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் தயாரிப்பு இல்லாமல் சிறப்பாக பேசுவது என்பது எல்லோராலும் எல்லா நேரங்களிலும் இயலாது. பேச்சு ஒரு சிறந்த கலையாகும். இளைஞர்கள் திறம்படப் பேசப் பழக வேண்டும். முன்னர் பேசப்போவதை எழுதிக் கொண்டு, பின்பு பேச வேண்டும். பிறகு குறிப்பெழுதிக்கொண்டு பேசலாம். என்கிறார் தமிழ்தென்றல் திரு.வி.க.

தலைப்புக்கு ஏற்ற கருத்துக்களை படித்து சிந்தித்து சேகரித்துப்பின், புதிதாக மேடையில் பேச இருப்பவர்கள் முழு பேச்சையும் எழுதி பலமுறை படித்துப் பார்த்து, பேசிப்பார்த்து, மனத்தில் பதியவைத்துக் கொண்டு பேசுவது சிறப்பாகும். வளர்ந்த பேச்சாளர்கள் குறிப்புகளை எழுதிவைத்துக் கொண்டு பேசலாம்
.
ஆப்ரகாம் லிங்கன் தான் பேசவேண்டிய பொருள் எது என முடிவானதும் என்ன பேச வேண்டும்? எதை முன் சொல்ல வேண்டும்? எங்கெங்கு எதையெதை வலியுறுத்த வேணுடும்? எதைச் சொன்னால் சிறக்கும்? என்று எண்ணிப் பார்ப்பாராம். அவைகளைக் கோர்வைப் படுத்திக் கொண்டபின் எங்கு சென்றாலும் அதே சிந்தனையாக இருப்பாராம். உண்ணும் போதும், உலவும் போதும் எண்ணிக் கொண்டே இருப்பாராம். அவரைச் சிறந்த பேச்சாளராக்கியது இந்த உணர்வே.

பேசப் போகிற தலைப்பு தொடர்பாக நமக்குத் தெரிந்த கருத்துக்களை நம் மனதில் உள்ளதை முதில் குறித்துவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தலைப்புக்கு ஏற்ற புத்தகங்களை ஆழ்ந்து படித்துத் தெளிந்த கருத்துக்களை குறித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களிடம் இந்த பொருள் குறித்து கலந்துரையாடலாம். அதன் வழியாகக் கிடைக்கும் புதிய செய்திகளையும் குறித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு சேகரித்த குறிப்புகளைக் கொண்டு உரையை தயாரிக்க வேண்டும். அவற்றில் நாம் பேச வேண்டிய கால அளவுக்கும், கேட்க வருவோர் தன்மைக்கும் ஏற்றவைகளைத் தேர்ந்தெடுத்து உரையை சிறப்பாக அமைக்க வேண்டும். அதிக அளவு தயாரித்து உரையைச் சுருக்கிக்கொள்ளுதல் வேண்டும்.

லூதர்பர்பாங் (Luther Burbank) என்பவர் இப்படித்தான் செய்வாராம். தான் எடுத்துக் கொண்ட தலைப்பை ஆராய்ந்து பார்ப்பார். கருத்துக்களை மிகமிக அதிகமாகச் சேகரிப்பார். அவைகளில் மிகவும் சிறப்பானவைகளைத் தேர்ந்தெடுப்பார். பின் அவைகளையே பேச எடுத்துக்கொள்வார். அவரது செயல் வியப்பூட்டுவதாகக் காண்கிறது. அவர் ‘நான் பேச வேண்டிய செய்திகளைப் பற்றி சிந்திப்பேன், சிந்தித்த கருத்துக்களுக்கு விளக்கம் தேடுவேன்; தேடிய கருத்துக்களை ஒழுங்குபடுத்தி அவற்றில் சறப்பானதை எடுத்துக் கொள்வேன். நூறு பங்கு தயாரித்து தொண்ணூறுபங்கு நீக்கி விடுவேன். பத்து பங்குதான் நான் பேச எடுத்துச் செல்வதாகும்’ என்று அவர் குறிப்பிடுகின்றார்.

எனவே எந்த பொருள் பற்றிப் பேச வேண்டுமோ அதைப் பற்றிப் போதுமான தகவல்களை சேகரித்து நூறு கருத்துக்கள் சேகரித்திருந்தால் அதில் மிகச்சிறந்த பத்து கருத்துக்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். (Collect a Hundtred Thoughts and discard ninety of them) இவ்வாறு சேகரித்து தேர்ந்தெடுத்த கருத்துக்களே பேச்சாகி விடாது. எவ்வளவு சிறப்பான கருத்தாக இருந்தாலும் அதை அப்படியே மனப்பாடம் செய்து மேடையில் திருப்பிச் சொல்வதன் மூலம் நீங்கள் எவரையும் கவர்ந்துவிட முடியாது. அது வேறும் கிளிப்பிள்ளைப் பாடமாக இருக்குமே தவிர உணர்ச்சி பூர்வமான உரையாக இருக்காது.

உங்கள் பேச்சைப் கேட்கின்றவர்கள் உங்களை அதில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நீங்கள் மக்களிடம் எவ்வளவு நேரம் பேசினாலும் அதில் என்ன செய்தியை (Message) தெரிவிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படுகின்ற செய்தியும், பாணியும் உங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பெரியார், காமராசர் போன்றோர் பேச்சை கேட்க மக்கள் திரண்டார்கள் காரணம் அவர்கள் பேச்சில் மக்களுக்கான செய்தி இருந்தது. மக்களும் அவர்தம் பேசில் ஏதோ ஒரு செய்தியை எதிர்பார்த்தார்கள். அந்தச் செய்திகளை எளிய தமிழில் கேட்பவர்களின் இதயத்தில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்லுகின்ற ஆற்றலை அவர்கள் பெற்றிருந்தார்கள். எனவே சொல்லுவதற்கு அடப்படையான செய்தி இல்லாமல் நீங்கள் எவ்வளவு சிரம்ப்பட்டு பேச்சை தயாரித்தாலும், எவ்வளவு மெருகேற்றினாலும் அந்தப் பேச்சு மக்களிடம் எடுபடாது.

ஆகவே தயாரிப்பு என்பது நீங்கள் என்ன செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறீர்களோ அதற்கான ஆதாரங்களையும், தகவல்களையும் மேற்கொள்களையும் சேகரித்து முறைப்படுத்திப் பேச்சின் போது அழகுபட வெளிப்படுத்துவதுதான்.

உலகத்தின் மிகச்சிறந்த போற்றத்தக்க சொற்போழிவுகளுள் ஒன்றான மலைச் சொற்பொழிவை (Sermon on the Mount) நிகழ்த்தும் முன் இயேசுபிரான் நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளும் உபவாசத்திலும் தியானத்திலும் இருந்ததாக மாத்யூ தன்னுடைய சுவிசேசத்தில் குறிப்பிடுகிறார்.

இயேசுபிரான் போன்ற மகான்களே தீர்க்கமாகச் சிந்தித்துத் தயாரித்துக் கொண்ட் பிறகுதான் சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறார்கள். அதே போல உலகத்தின் மிகச் சிறந்த சொற்பொழிவுகள் அனைத்தும் கவனமாக தயாரிக்கப்பட்டவையே. சர்ச்சிலின் யுத்தகால பேச்சுக்களும், ஆப்ரகாம்லிங்கனின் உரைகளும், நேருவின் சொற்பொழிவுகளும், அண்ணாவின் உரைகளும் இன்றைக்கும் உயிர்ப்புடன் விளங்கக் காரணம், வரலாற்றின் நெருக்கடியான அல்லது குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களில் அவர்கள் உரையாற்றியது அந்த உரைகளின் சிறப்புக்கு ஓரளவு காரணம் என்றாலும், அவர்கள் அந்த உரையை தயாரித்தவிதம், அந்தப் பேச்சுக்கு ஊட்டிய அழகும், நிக்ழ்த்திய பாணியும், அந்தப் பேச்சுகளின் சிரஞ்சீவித் தன்மைக்குக் காரணமாகும்.

குறிப்பாக ஆப்ரகம் லிங்கன் கெட்டிஸ்பர்க் நகரில் ஆற்றிய உரை வரலாற்றின் ஒரு பகுதியாகவே இடம் பெற்று விட்டது. ஏறத்தாழ நாற்பது வரிகள் கொண்ட அந்தப் பேச்சு. அதைப் பேச லிங்கனுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்காது. இருந்த போதிலும் அந்த உரையில் அவர் வெளியிட்ட எண்ணங்கள், காட்டிய உணர்ச்சி, தான் ஏற்றுக் கொண்ட செயலில் வெளிப்படுத்திய உள்ளார்ந்த ஈடுபாடு, அந்த் உரையைத் தயாரிக்க அவர் எடுத்துக் கொண்ட அழைப்பு, அதை அழகு படுத்துவதில் அவர் காட்டிய அக்கறை, எல்லாவற்றிற்கும் மேலாக, சொல்ல வந்த கருத்தில் அவருக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கை ஆகிய அனைத்தும் சேர்ந்து அவருடைய கெட்டிஸ்பர்க் சொற்பொழிவுக்கு உன்னதத்தை உண்டாக்கிவிட்டது.
குறிப்பாக “Government of the people, by the people, for the people” என்கிற வாசகம் உலகப் பிரசித்தி பெற்ற அரசியல் வாசகமாக இன்றைக்கும் பலராலும் கையாளப்படுகிறது. 

இதேபோல இரண்டாவது உலகப்போரில் ஜெர்மானிய விமானங்கள் பிரிட்டனின் மீது கடுமையாகக் குண்டு வீசிய போது பிரிட்டீஷ் விமானப்படை அந்தத் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் வலிமை படைத்ததாக இருக்கவில்லை. அது போலவே ஐரோப்பியப் போர்முனையிலும் நேசப்படைகள் ஜெர்மானியப் படைகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கிக்கொண்டிருந்த நேரம். அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய உற்சாகப் பேருரைகளே பிரிட்டிஷ் மக்களிடம் நம்பிக்கையினைத் தோற்றுவித்து, போராட்ட உணர்ச்சியை ஊக்குவித்தது.

கடலில் போரிடுவோம்; விண்ணில் போரிடுவோம்; மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம்; பள்ளத்தாக்குகளிலும், அகழிகளிலும் போரிடுவோம்; தெருக்களில் போரிடுவோம்; சந்துக்குச் சந்து, வீட்டுக்கு வீடு போரிடுவோம்; ஆனால் ஒரு போதும் சரணாகதி அடையமாட்டோம். – இது அந்தச் சமயத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய வீர வாசகங்களில் ஒன்று.
‘நாம் சில போர்க்களங்களை இழக்கலாம். ஆனால் யுத்தத்தில் நாம்தான் வெற்றி பெறுவோம்’ (We may loose some battles; Bat we will win the war) இதுவும் சர்ச்சிலின் உரைகளில் ஒரு வாசகம்.

அது போலவே பிரிட்டனின் எண்ணிக்கையில் குறைந்த விமான வீரர்கள் பலம் படைத்த பெரிய ஜெர்மனி விமானப் படையை முறியடித்தது பற்றி சர்ச்சில் குறிப்பிடும்போது, ‘Never in the field of the human conflict was so much owed by so many to so few’ என்று வெகு அற்புதமாகக் குறிப்பிட்டார். கவனமான தயாரிப்பும் பொறுமையான பயிற்சியுமே சர்ச்சிலை வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சாளராக உருவாக்கிற்று.

மேடை நடுக்கம்:
பலருக்கும் தாங்கள் பேச்சாளராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் மேடையேற பயப்படுவார்கள். ஆர்வமிருந்தும், நல்ல ஆழ்ந்த அறிவு இருந்தும் தைரியம் இல்லை என்றால் மேடையில் துணிவோடு பேசமுடியும் என்ற நம்பிக்கை வர வேண்டுமானால் முதலில் நீங்கள் பேசவேண்டிய செய்தியில் உங்களுக்கு தெளிவு வேண்டும். உங்கள் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நீங்கள் சொல்லப் போகிற கருத்தில் உறுதியான நம்பிக்கை இருந்தால் தைரியம் வரும். இந்த நம்பிக்கை இல்லாதவர்கள் ஐயோ நாம் தவறாக பேசிவிடுவோமோ? என்றெல்லாம் நினைத்துக் கொண்டு தன்னம்பிக்கையில்லாமல் மேடை ஏறினால் பயம் ஏற்படும். கூட்டத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பேச்சு குறித்து என்ன நினைப்பார்கள் என்று எண்ணினால் பயம் தோன்றும். நீங்கள் சொல்லப்போகிற செய்தியை எதிரில் உள்ளவர்களைவிட நீங்களே மிக நன்கு அறிந்தவர் என்ற நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினால் அச்சம் தலை தூக்காது.

எதிரிலிருப்பவர்களில் சிலர் அறிவாளியாக இருக்கலாம். அவர்களை பார்த்ததும் ‘நாம் கண்டபடி பேசினால் இவர்களது ஏளனத்துக்கு ஆளாவோமே’ என்ற ஐயமே உங்களை ஆட்டி வைக்கிறது. செஸ்டர் பீல்டு பிரபு தம் மகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பாராளுமன்றத்தில் பேசும் போது, எதிரிலிருப்பவர்கள் எல்லோரும் மூடர்கள் என்று கருதுவேன். சொற்பொழிவு உடனே தடதடவென்று மிக எளிதாகக் கொட்டும்’ என்று எழுதுகிறார். லூதர் என்பவர், ‘முதலில் மேடைஏறிப் பேசப் புகும் மனிதன், எதிரில் எண்ணற்ற தலைகளைக் கண்டு நிலை தடுமாறுகிறான், நான் அங்கு நிற்கும் போது யாரையும் பார்க்கமாட்டேன். அவர்களெல்லாம் வெறும் கல் என்று எண்ணுவேன்’ என்றார்.

மேடைக் கூச்சம் போவதற்காக தொடக்க காலத்தில் நான் மிகவும் உரக்கப் பேசுவது வழக்கம். பள்ளியில் கூட்டங்களில் நான் ஆவேசமாக பேசுவது கேட்டு மேடைக்கு அருகில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் பயந்து போவார்கள் அப்படி உரக்கப் பேசுவேன். ஆவேசமாக, உரக்கப் பேசும் போது பயம் தோன்றாது. இந்த மேடை பயம் (கூச்சம்) அவையில் பேச முயற்சிக்கும் எல்லோருக்கும் தொடக்கத்தில் ஏற்படுகின்ற ஒன்றுதான். உலகத்தில் மிகப் பெரிய பேச்சாளர்கள் கூட தங்களுடைய ஆரம்ப காலத்தில் இத்தகைய அச்சத்துக்கு உள்ளாகி அவதிப்பட்டிருக்கிறார்கள். பொது மன்றத்தின் சிறப்பான பேச்சுக்கள் அனைத்தும் பயத்துடன் நடுக்கத்துடனும்தான் தங்கள் ஆரம்ப விழாவை நடத்தியிருக்கின்றனர் என்று உலகின் மிகப்பெரிய பேச்சாளர்களில் ஒருவரான சிசரோ சொல்லி இருக்கிறார்.

இன்று மாதந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை மேடைகள் தோறும் சந்திக்கிறேன். ஆனால் எனது முதல் மேடைப் பேச்சு பயத்தோடு பாதியிலேயே நின்றுபோனது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளி மாணவர் மன்றக் கூட்டத்தில் ஒழுக்கம் என்ற தலைப்பில் நான் பேச வேண்டும். மேடையில் போய் நின்று தலைவர் அவர்களே, ஆசிரியச் சான்றோர்களே என்று இரண்டு அடிகளைத்தான் சொல்ல முடிந்தது. பயத்தின் காரணமாக மனப்பாடம் செய்து வந்ததெல்லாம் மறந்துவிட்டது. சரிபோய் உட்கார் என்று ஆசிரியர்கள் சொல்லி விட்டார்கள். ஆனால் இன்று மேடைகளில் சரளமாக தங்குதடையின்றி மணிக்கணக்காக பேச முடிகிறது. காரணம் முயற்சியும் தன்னம்பிக்கையும்தான்.

பாரட்லா படித்துவிட்டு வந்து பாரதத்தின் விடுதலைக்குப் பாடுபட்டு நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து உரையாற்றி வழிகாட்டிய மகாத்மா கந்தி வழக்கறிஞராக முதல் முறையாக நீதிமன்றத்தில் பேச பயந்து வாடிக்கையாளரிடமே பெற்ற தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதை அவரின் சத்தியசோதனை நமக்கு தெரிவிக்கிறது.
உலக நாடுகளில் எல்லாம் உலாவந்து தன் உன்னதமான கருத்துகளை தன் பேச்சுவன்மையால் உலகத்துக்கு உணர்த்திய பண்டித நேரு ஹேரோ பள்ளியில் படிக்கும்போது அங்குள்ள மாணவர் சங்கத்தில் பேசப் பயந்து அபராதம் கட்டியதாக அவர் வரலாறு உரைக்கிறது.

உலகின் மிகப்பெரிய பேச்சாளர்களே தங்கள் மேடைப்பேச்சு முயற்சியைத் தொடங்கியபோது மேடைக் கூச்சத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே நாம் எதற்காக தயங்க வேண்டும். ஆம்! தன்னம்பிக்கையோடு முயற்சிப்போம். ஆரம்பத்தில் மேடை நடுக்கம் ஓரளவுக்கு இருக்கவே செய்யும். நடுங்குகின்ற உங்கள் கால்களை நன்றாக ஊன்றிக் கொள்ளுங்கள். நடுங்குகின்ற கரங்களை கூட்டத்தினர் பார்க்காதபடி பின்புறமாகக் கட்டிக் கொள்ளுங்கள். அல்லது நீங்கள் அணிந்துள்ள ஆடையில் பக்கவாட்டில் பைகள் இருந்தால் அதில் விட்டுக் கொள்ளுங்கள். இந்த நடுக்கம் பேச்சு சூடுபிடித்தவுடன் தானாகவே மறைந்துவிடும்.

எனவே, விடா முயற்சியும், என்ன பேசுவது என்பது குறித்து தெளிவும், பேசும்போது காட்டிடும்தன்னம்பிக்கையுடன் பயிற்சியும் சேர்ந்தால் மேடைக்கூச்சம் விரைவில் விடைபெறும்.



















வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

அனைத்து தமிழர்களுக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

சிறிய வயதில் பள்ளிப் பாடத்தில் ஒரு பொங்கல் பாட்டு வருகின்றது. எமது வகுப்பு ரீச்சா் அப் பாடலை இராகத்துடன் பாட சிறியவர்கள் நாமெல்லோரும் இணைந்து அதை மகிழ்சியுடன் பாடி ஆடுவோம். அப் பாடலில் உள்ளது போலவே எனது வீட்டிலும் அனைத்து செயற்பாடுகளும் நடக்கும். அதனால் சிறுவயதில் இதைப் பாடும் போது எனது வீட்டு காட்சிகளே மனதில் சித்திரமாய் ஓடும். அவ்வகையில் இப் பாடல் என் பிஞ்சு வயதில் பசுமரத்தாணி போல் மனதில் நிலைபெற்றுவிட்டது. ஒவ்வொரு பொங்கலின் போதும் தவறாமல் என் மனதில் இசைக்கும் பாடல் இது. என்னுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள். நாமெல்லோரும் சேர்ந்து அந்த நாள் ஞாபகங்களை இன்பமுடன் மீட்டி மகிழ்வோம்.

பொங்கலோ பொங்கல்

தைத் திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப் பொங்கல்
கோலமிட்டு விளக்கேற்றி கும்பிடுவார் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா
விரும்பிய மா வாழை பலா விதம் விதமாய் கனிகள்
கரும்பிளநீா் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள்
வெண்ணிறப்பால் பொங்கிவர வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்



முதல் முயற்சி

வலையுலக சகோதர சகோதரிகளே!
உங்களிற்கு என் அன்பான வணக்கங்கள். முதற் தடவையாக நான் இவ் வலையுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறேன். என்னுள் புதைந்திருக்கும் எண்ணங்களை இங்கு வெளியிடலாம் என்ற ஆவலில் வந்திருக்கிறேன். என்னை யார் எழுதச் சொல்லிக் கேட்டது. இப்படி ஒரு பதிவு தேவை தானா? என்று பல தடவை யோசித்ததுண்டு. இப்படி யோசித்து யோசித்தே நீண்ட காலத்தைக் கடத்திவிட்டேன். இருந்தும் ஏதோவொரு எண்ண உத்வேகத்தில் இதை ஆரம்பிக்கின்றேன். எதையும் மனதில் வைத்திருக்காமல் புலம்பிக் கொட்டிவிட்டால் நல்லது என்று தோன்றியது. அதுதான் இப்படியொரு வேண்டாத வேலையில் இறங்கியிருக்கிறேன். வலையுலக சகோதர சகோதரிகளே தயைகூர்ந்து பொறுத்தருள்வீராக. 

என்றும் அன்புடன், 
சக்திப்பிரதா



முதல்வனுக்கு எனது முதல் வணக்கம்


ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே  
வக்ர துண்டாய தீமஹி  
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.